

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், 5 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த 2 தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
உத்தரபிரதேசத்தில் 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, பெஹத் தொகுதியில் உமர் அலிகான், சஹாரன்பூர் தொகுதியில் ஆஷு மாலிக், கைரானா தொகுதியில் நஹித் ஹசன், அம்ரோஹா தொகுதியில் மெகபூப் அலி, லலித்பூர் தொகுதியில் ஜோதி லோதி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 தொகுதிகளில் பெஹத் மற்றும் சஹாரன்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த தொகுதிகளுக்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் தரப்பில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், 130 தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் சமாஜ்வாடி கட்சியிடம் காங்கிரஸ் வழங்கியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாடி கட்சியின் இந்த வேட்பாளர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது