

லக்னோ,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி மாநில எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதியில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, திக்ரி, காசிபூர் எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசுடன் விவசாய அமைப்பினர் மேற்கொண்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று விவசாயிகள் பிரம்மாண்டமான முறையில் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்தனர். மூன்று இடங்களில் பேரணி நடத்த டெல்லி போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒரு குழுவினர் டெல்லி நகருக்குள் நுழையத் தொடங்கினர். அப்போது டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, அதன் கோபுரத்தில் விவசாய சங்கத்தின் கொடிகளை ஏற்றினர்.
இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு பேரணி வன்முறையாக மாறியது. இதில் போலீசாரும், விவசாயிகளும் காயம் அடைந்தனர். பேரணி முடிந்த நிலையில் அந்தந்த இடங்களில் மேலும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி - உத்தர பிரதேச மாநில எல்லையான காசிபூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உடனடியாக போராட்டத்தை முடித்துக் கொண்டு சாலைகளில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தர பிரதேச அரசு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் அரியானா மாநில எல்லையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கலைந்து செல்லுமாறு அந்த மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ள நிலையில், அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரியானா காவல்துறை முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.