உத்தரபிரதேசம்: டிரைவரின் உரிமத்தை 99 ஆண்டுகளுக்கு ரத்து செய்த ரேபிடோ நிறுவனம்

காரில் பயணித்த ரெயில்வே அதிகாரிகள், தங்கள் உயர் அதிகாரி ஒருவரை சாதி ரீதியாக விமர்சித்ததால் பிரச்சினை ஏற்பட்டது.
ரேபிடோ டிரைவர்
Published on

லக்னோ,

ரெயில்வே அதிகாரிகளை பாதியில் இறக்கி விட்ட ரேபிடோ கார் டிரைவரின் உரிமத்தை 99 ஆண்டுகளுக்கு ரத்து செய்து செய்து ரேபிடோ நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ரேபிடோ நிறுவனத்தில் கார் ஓட்டுநராக அங்கித் குமார் (வயது 30) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சவாரியில் இருக்கும்போது புக்கிங் மூலமாக 4 ரெயில்வே துறை அதிகாரிகளை ஏற்றி சென்றுள்ளார். அந்த அதிகாரிகள் உத்ரேட்டியா ரெயில் நிலையத்திலிருந்து சார்பாக் ரெயில் நிலையம் வரை செல்வதற்கு ரேபிடோ சவாரியை புக்கிங் செய்துள்ளனர்.

சாதி தொடர்பாக விமர்சனம்

காரில் பயணித்த அதிகாரிகள் அவர்களது மூத்த அதிகாரியை விமர்சித்து வாய்க்கு வந்தபடி பேசியுள்ளனர். இதனை கேட்டுக் கொண்டிருந்த டிரைவர் அங்கித், முதலில் இதனை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து பேசிய அதிகாரிகள், ஒரு கட்டத்தில் மூத்த அதிகாரியின் சாதியை குறிப்பிட்டு விமர்சித்து உள்ளனர். இதனை கேட்ட அங்கித் அதே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத ரெயில்வே அதிகாரிகள் மீண்டும் மீண்டும் சாதி தொடர்பாகவே மூத்த அதிகாரியை விமர்சித்தனர். பல முறை கூறியும் சாதி ரீதியாக பேசுவதை விடவில்லை.

சஸ்பெண்ட்

இதனால் ஆத்திரமடைந்த அங்கித், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் 4 பேரையும் டெலிபாக் சந்தை அருகே காரை நிறுத்தி இறங்குமாறு கூறினார். காரில் இருந்து இறங்கிய ரெயில்வே அதிகாரிகள் உடனே ரேபிடோ நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அங்கித் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய ரேபிடோ நிறுவனம் அங்கித்திடம் எந்த ஒரு கருத்தையும் கேட்காமல், அவரது ரேபிடோ உரிமத்தை 99 ஆண்டுகள், 11 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com