உத்தரபிரதேச சாலை விபத்து... 10 பேர் பலி- திரவுபதி முர்மு இரங்கல்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சத்தீஷ்காரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார் பிரயாக்ராஜ் நகரில் மெஜா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றபோது, நேற்றிரவு பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விபத்திற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மிர்சாபூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் பலர் இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






