உத்தர பிரதேசம்: சாலையில் பணத்தை வாரி இறைத்து தப்ப முயன்ற கடத்தல்காரன் கைது

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த துரத்தலின் இறுதியில் கடத்தல்காரர்களின் காரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
கடத்தல்காரன் கைது
Published on

பட்னா,

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா நெடுஞ்சாலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி கார், போலீசாரின் நிறுத்த கூறியும் சிக்னலை மதிக்காமல் அதிவேகமாக தப்பி சென்றது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அந்த காரை துரத்த தொடங்கினர். மேலும் துரத்தலின் போது, கடத்தல்காரர்கள் தங்களின் காரை கொண்டு போலீஸ் வாகனத்தை பலமுறை பலமாக தாக்கினர்.

சினிமா பாணியில்

இதில் போலீஸ் வாகனம் பலத்த சேதமடைந்து நடுவழியிலேயே நின்றது . கடத்தல்காரர்கள் தப்பித்துவிடுவார்கள் என்ற இக்கட்டான சூழ்நிலையில், அங்கு வந்த உள்ளூர் நபர் ஒருவர் தனது சொந்த காரை போலீசாரிடம் கொடுத்து உதவினார்.

போலீசார் அந்த காரில் ஏறி கடத்தல்காரர்களை விடாமல் துரத்தினர், தங்களை போலீசார் நெருங்குவதை உணர்ந்த கடத்தல்காரர்கள், சினிமா பாணியில் போலீசாரின் பிடியிலிருந்து தப்புவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சாலையில் 100 ரூபாய் நோட்டு கட்டுகளை சாலையில் விசினர். பொதுமக்கள் பணத்தை எடுக்க ஓடிவந்தால், போலீஸ் வண்டி நின்றுவிடும் என நினைத்தனர். ஆனால், போலீசார் தொடர்ந்து விரட்டினர்.

சுற்றி வளைத்த போலீசார்

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த துரத்தலின் இறுதியில் கடத்தல்காரர்களின் காரை போலீசார் சுற்றி வளைத்தனர். தப்பிக்க வழியில்லாததால் கடத்தல்காரர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் நடத்திய பதில் துப்பாக்கி சூட்டில்,ஒரு கடத்தல்காரனின் காலில் குண்டு பாய்ந்தது.

அவன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டான். கடத்தல் பொருட்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய மற்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com