

டேராடூன்,
இந்தியாவில் முதன் முறையாக விவசாய நிலங்களை குத்தகைக்கு விட உத்தரகாண்ட் மாநில அரசாங்கம் கொள்கை வகுத்துள்ளது. இது குறித்து உத்தரகாண்ட் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தை 30 வருட குத்தகைக்கு கொடுப்பதன் மூலமாக அந்த நிலத்திற்கான வாடகை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில், விவசாயம், தோட்டக்கலை, மூலிகைகள், பருவகால காய்கறிகள், பால் உற்பத்தி, தேயிலைத் தோட்டம் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவற்றிற்கான நிலங்களை குத்தகைக்கு விடுவதில் உள்ள தடைகள் இந்த நடவடிக்கையால் நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ராஜ் பவனில் ஒப்புதல் பெற்ற பிறகு, உத்தரகாண்ட் மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் எந்த ஒரு தனியார் நிறுவனமோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ கிராமங்களில் பண்ணை நிலங்களை குத்தகைக்கு எடுக்கலாம். அதிகபட்சம் 30 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடலாம்.
குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் அதிக நிலங்களை குத்தகைக்கு எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்ணை நிலத்தை சுற்றி அரசு நிலம் இருந்தால், அதை மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் கட்டணம் செலுத்தி குத்தகைக்கு விடலாம்.
நிலத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் உத்தரகாண்ட் மாநில அரசு இந்த கொள்கையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.