

டேராடூன்,
உத்தரகாண்டில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது. உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், தொடர் கனமழையால் உத்தரகாண்ட் வெள்ளக்காடானது. நடப்பு சூழல் பற்றி பாவ்ரி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் முதல்-மந்திரி புஷ்கார் சிங் தமி ஆலோசனை நடத்தினார்.
உத்தரகாண்டில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு, வீடுகளை இழந்தோருக்கு ரூ.1,09,000 வழங்கப்படும் என முதல்-மந்திரி தமி அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரகாண்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியே சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, உத்தரகாண்ட் பேரிடர் பற்றி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினேன். கனமழை பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 11 பேரை காணவில்லை என கூறியுள்ளார்.
இந்த நிலையில், உத்தரகாண்டில் பேரிடரை முன்னிட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்ந்து உள்ளது. 88 பேர் மீட்பு நடவடிக்கையில் மீட்கப்பட்டு உள்ளனர்.
உத்தரகாண்ட் பேரிடரை முன்னிட்டு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி தன்னுடைய, அக்டோபர் மாதத்திற்கான ஒரு மாத ஊதியத்தினை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என அறிவித்து உள்ளார்.