உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: மூழ்கிய கிராமம்; 4 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தாராலி முக்கிய நிறுத்தமாகும், அங்கு பல ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் உள்ளன.
இந்நிலையில் இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.
உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டநிலையில், 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
உத்தரகாசியின் தாராலியில் நடந்த இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். உத்தர்காசி நிலைமை குறித்து முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு உதவி வழங்குவதில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரகாண்ட் வெள்ளம், நிலச்சரிவு குறித்து மாநில முதல்-மந்திரியுடன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்புநடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்டில் உள்ள மாட்லியில் நிறுத்தப்பட்டுள்ள 12வது பட்டாலியனில் இருந்து 16 பேர் கொண்ட இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை (ஐடிபிபி) குழு தாராலியை அடைந்துள்ளது, அதே நேரத்தில் அதே பலம் கொண்ட மற்றொரு பிரிவும் மேக வெடிப்பு இடத்திற்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






