உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 10-வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 10-வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 10-வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால், அலக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த நீர்மின்நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.

தேசிய அனல்மின் கழகத்துக்கு சொந்தமான தபோவன்-விஷ்ணுகாட் சுரங்கத்தில் சேறும், இடிபாடுகளும் குவிந்ததால், உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்தோ-திபெத் எல்லை படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் போராடி வருகிறார்கள்.

நேற்று அவர்கள் மின்திட்ட பகுதியில் இருந்து மேலும் 3 உடல்களை மீட்டனர். இதனுடன் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து விட்டது. இன்னும் 150-க்கு மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

சுரங்கத்திலும் தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. சேற்றில் துளையிட்டு கேமராவையோ, குழாயையோ திணித்து, தொழிலாளர்கள் சிக்கி உள்ள இடத்தை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், துளையிட முடியாத அளவுக்கு சேறு இறுகிப்போய் இருப்பதால், அம்முயற்சி பலனளிக்கவில்லை. எனவே, பள்ளம் தோண்டும் சாதனங்கள் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதன்மூலமே மீட்புப்பணி நீடித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com