

புதுடெல்லி
உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நந்தா தேவி பனிப்பாறை உடைந்ததில் குறைந்தது 19 பேர் பலியானார்கள். 200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர்.
தவுலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலக்நந்தா நதிகளில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வெள்ளத்தால் உத்தரகண்ட் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டது.வெள்ளத்தால் என்டிபிசியின் தபோவன்-விஷ்ணுகாட் ஹைட்ல் திட்டம் மற்றும் ரிஷி கங்கா ஹைட்ல் திட்டம் ஆகியவற்றின் கீழ் சுரங்கத்தில் வேலைபார்த்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.தபோவனில் சுரங்கப்பாதையில் குறைந்தது 34 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி), தேசிய பேரிடர் படை (என்.டி.ஆர்.எஃப்) ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மீட்புப் பணிகளில் உதவுவதற்காக மருத்துவப் படையினர் உட்பட ராணுவத்தின் குழுக்களும் தபோவன் பகுதிக்கு வந்துள்ளன.
காணாமல் போனவர்களின் விவரங்களை உத்தரகண்ட் போலீசார் வெளியிட்டுள்ளனர், 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு பின்னர் காணாமல் போன 202 பேரின் விவரங்களை உத்தரகண்ட் போலீசார் வெளியிட்டனர்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) மி -17 மற்றும் சினூக் ஹெலிகாப்டர்களை வந்துள்ளது.
உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் கூறும் போது இன்று காலை நிலவரப்படி, முதல் சுரங்கப்பாதையில் இருந்து 32 பேரும், இரண்டாவதில் 121 பேரும் காணவில்லை, சுரங்கங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன.
உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தபோவன் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உயிர்களைக் காப்பாற்றுவது முதல் முன்னுரிமை என்று கூறினார்.
உத்தரகாண்ட்டில் வெள்ளத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் உத்தரகாண்ட் மாநில எம்பிக்களுடன் சேதங்கள் குறித்து விவாதித்தனர்.
நிவாரணப் பணிகளுக்கான அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என்று எம்பிக்களிடம் பிரதமர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.