உத்தரகாண்ட்: ஜோதிர்மத் கோவில் உள்பட பல கட்டிடங்களில் மீண்டும் விரிசல், நிலச்சரிவு; முதல்-மந்திரி இன்று ஆய்வு

உத்தரகாண்டில் ஜோதிர்மத் கோவில் உள்பட பல கட்டிடங்களில் மீண்டும் விரிசலும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட்: ஜோதிர்மத் கோவில் உள்பட பல கட்டிடங்களில் மீண்டும் விரிசல், நிலச்சரிவு; முதல்-மந்திரி இன்று ஆய்வு
Published on

டேராடூன்,

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமத் நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது. இதில், விரிசல்கள் விட்டு உள்ளன. அந்த பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று அந்த நகரின் மார்வாரி பகுதியில் கோவில் ஒன்று குடியிருப்பு கட்டிடத்தின் மீது நேற்று விழுந்துள்ளது. நில பகுதியும் பூமிக்குள் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகாண்டில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இமயமலை நகரம் என அழைக்கப்படும் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது.

அவசரகால நிலையை உணர்ந்த அரசும் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவினர், ஜோஷிமத் பகுதியில் உள்ள மக்களை மீட்டு, நகராட்சி கட்டிடங்கள், குருத்வாராக்கள் மற்றும் பள்ளி கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்று தங்க வைத்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க ஜோஷிமத் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகளில் விரிசல்கள் விட்டுள்ளன. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் இந்த நிலை காணப்படுகிறது.

வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும் ஆபத்து நிலை ஏற்பட்டு உள்ளது. சிறிய அளவில் மழை பெய்து விட்டாலும், அது நகரின் பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

ஜோதிர்மத் கோவிலின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்ட நிலையில், முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி தலைமையில் உயர்மட்ட கூட்டம் ஒன்று செயலகத்தில் நடந்து மறுசீராய்வு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு மக்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக பெரிய அளவில் தற்காலிக புனரமைப்பு மையம் அமைக்கவும் தமி உத்தரவிட்டு உள்ளார்.

அடுத்த உத்தரவு வரும்வரை, அந்த பகுதியில் அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் முதல்-மந்திரி தமி இன்று ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளார். முன்னாள் முதல்-மந்திரி ஹரீஷ் ராவத்தும் ஆய்வு செய்ய செல்ல உள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், தொடர்ந்து இந்த விரிசல் ஏற்பட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com