உத்தரகாண்ட் சுரங்க விபத்து; மீட்புப் பணிகள் குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி நேரில் ஆய்வு

மீட்புப் பணிகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் நிதின் கட்கரி கேட்டறிந்தார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி 7 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கும் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் ஆகியவை குழாய் மூலம் வழங்கப்பட்டு வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உதவியுடன் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுரங்க இடிபாடுகள் வழியாக துளையிட்டு சுமார் 3 அடி அகலம் கொண்ட குழாயை உள்ளே செலுத்தி அதன் மூலம் தொழிலாளர்கள் 40 பேரையும் மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் நிதின் கட்கரி கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புஷ்கர் சிங் தாமி, "அனைவரின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் முதல் குறிக்கோள். அதற்காக மாநில அரசு சார்பில் மீட்புப் படையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com