உத்தரகாண்ட் இயற்கை பேரிடர் விவகாரம்: பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

உத்தரகாண்ட் இயற்கை பேரிடர் விவகாரம் பற்றி பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது.
உத்தரகாண்ட் இயற்கை பேரிடர் விவகாரம்: பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
Published on

சமோலி,

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இமயமலை நகரம் என அழைக்கப்படும் ஜோஷிமத் நகரானது அமைந்து உள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது. நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை இந்நகரம் கொண்டுள்ளது.

இந்த சூழலில், கடந்த சில நாட்களாக இந்த கோவிலில் பெரிய அளவில் விரிசல்கள் விட்டு உள்ளன. அந்த பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று அந்த நகரின் மார்வாரி பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது, கோவில் ஒன்று நேற்று முன்தினம் சரிந்து விழுந்துள்ளது. நில பகுதியும் பூமிக்குள் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது. தவிர, வரலாற்று சிறப்பு மிக்க ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 500-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. இது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், அவசரகால நிலையை உணர்ந்த அரசும் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவினர், ஜோஷிமத் பகுதியில் உள்ள மக்களை மீட்டு, நகராட்சி கட்டிடங்கள், குருத்வாராக்கள் மற்றும் பள்ளி கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு அவர்களை கொண்டு சென்று தங்க வைத்துள்ளனர்.

நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் இந்த நிலை காணப்படுகிறது. வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும் ஆபத்து நிலை ஏற்பட்டு உள்ளது. சிறிய அளவில் பெய்ய கூடிய மழையும், நகரின் பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

இந்நிலையில், முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி தலைமையில் உயர்மட்ட கூட்டம் ஒன்று செயலகத்தில் கூட்டப்பட்டு, மறுசீராய்வு பணிகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு மக்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதற்காக பெரிய அளவில் தற்காலிக புனரமைப்பு மையம் அமைக்கவும் தமி உத்தரவிட்டு உள்ளார். அடுத்த உத்தரவு வரும்வரை, அந்த பகுதியில் அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் முதல்-மந்திரி தமி நேற்று ஆய்வு பணிகளில் ஈடுபட சென்றார். முன்னாள் முதல்-மந்திரி ஹரீஷ் ராவத்தும் ஆய்வு செய்ய செல்ல உள்ளார் என தகவல் வெளியானது.

இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட பின்பு முதல்-மந்திரி தமி கூறும்போது, ஒவ்வொருவரையும் பாதுகாப்பதற்காக முயற்சித்து வருகிறோம். தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராகி வருகிறோம். எங்களது முதல் வேலை மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்வது ஆகும்.

இதற்காக புவிஅறிவியலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். கவுகாத்தி மையம், ஐ.ஐ.டி. ரூர்கி மற்றும் இஸ்ரோவுடனும் நாங்கள் பேசி வருகிறோம். இந்த விரிசல் ஏற்படுவற்கான காரணம் என்னவென்று ஒவ்வொருவரும் அறிய முயன்று வருகிறோம்.

இந்த பகுதியிலுள்ள மக்களை புலம்பெயர செய்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது பற்றியும் நாங்கள் கூர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கான சரியான இடம் பற்றி தேர்வு செய்தும் வருகிறோம். இது குளிர்காலம். அதனால், இந்த விவகாரம் பற்றி உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், ஜோதிர்மடம் மற்றும் சங்கராச்சார்யா மடத்தில் சமீப நாட்களாக அடுத்தடுத்து விரிசல் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி ஜோதிர்மடத்தின் நிர்வாகம் இன்று கூறும்போது, கடந்த 15 நாட்களாக இந்த விரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது என தெரிவித்து உள்ளது.

அந்த மடத்தின் சுவாமி விஷ்வபிரியானந்தா கூறும்போது, இயற்கை பேரிடரால் இதுபோன்று ஏற்படுகிறது.

நீர்மின் ஆற்றல் திட்டங்கள் மற்றும் சுரங்க பாதைகள் எங்களது நகரை பாதித்து உள்ளன. இந்த விரிசலானது அழிவுக்கான காரணிகளில் ஒன்றாக உள்ளது. 15 நாட்களுக்கு முன்பு இதுபோன்ற விரிசல்கள் எதுவும் இல்லை. ஆனால், சமீப நாட்களாக மடத்தில் விரிசல் அதிகரித்து செல்கிறது என கூறியுள்ளார்.

குளிர்காலத்தின்போது பத்ரிநாத் கோவிலில் இருந்து வாசுதேவ கோவிலுக்கு சுவாமி பத்ரிநாத் கொண்டு செல்லப்படுவார். அப்போது, இந்த ஜோஷிமடம் எனப்படும் ஜோதிர்மடத்திற்கு கொண்டு வரப்படும். இந்த புனித நகரானது இந்துக்களால் முக்கிய யாத்ரீக மையங்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் பொறுப்பு படையை சேர்ந்த குழுக்களும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் இயற்கை பேரிடர் விவகாரம் பற்றி பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளரான டாக்டர் பி.கே. மிஷ்ரா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலகம், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் ஜோஷிமத் மாவட்ட அதிகாரிகளும் காணொலி காட்சி வழியே கலந்து கொள்வார்கள். இதேபோன்று, உத்தரகாண்டின் மூத்த அரசு அதிகாரிகளும் இந்த மறுஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com