உத்தரகாசி சுரங்க விபத்து: இறுதிக்கட்ட பணிகள் தாமதம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

உத்தரகாசி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சில்க்யாரா-தண்டல்கான் இடையே சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை பணியின்போது விபத்து ஏற்பட்டது.

கடந்த 12-ந் தேதி சாலைப்பணிகள் நடந்து கொண்டு இருந்தபோது சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி இன்று 11-வது நாளாக தொடருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 48 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 12 மீட்டர் மட்டுமே தோண்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சமைத்த சத்தாண உணவு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பது உறுதியாகி இருப்பதால் மீட்பு பணி வேகம் எடுத்துள்ளது. தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இறுதிகட்ட மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 41 தொழிலாளர்களை மீட்கும் இறுதிகட்ட பணிகள் நடைபெறும்நிலையில் துளையிடும் எந்திரத்தின் பிளேடுகள் சேதமடைந்துள்ளன. சுரங்கப்பாதையை துளையிடும் ஆகர் எந்திரத்தின் பிளேடுகளை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்படி செங்குத்தாகவும், பக்கவாட்டிலும் துளையிடப்பட்டு, இரும்பு குழாய்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. போர்கால அடிப்படையில் பைப்புகளை வெல்டிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com