

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாவட்டத்தின் சரையா மசூட்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திர சவுகான் (வயது 40). இவரது மகன் சவுரவ் (வயது 13), உறவுக்கார சிறுவன் சோபித் (வயது 17). இவர்கள் 3 பேரும் இன்று கிராமத்திற்கு அருகே உள்ள ஷக்கு ஆற்றை பார்வையிட சென்றனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.