பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தியது மறக்க முடியாத தருணம், மகிழ்ச்சி; செவிலியர்கள் பேட்டி

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தியது மறக்க முடியாத தருணம் மற்றும் மகிழ்ச்சி என்று அதற்கான பணியில் ஈடுபட்ட செவிலியர்கள் இன்று கூறியுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தியது மறக்க முடியாத தருணம், மகிழ்ச்சி; செவிலியர்கள் பேட்டி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அவசரகால தேவைக்காக கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் 1ந்தேதி தொடங்கியது.

இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகள் கொண்டு, கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை அவர் செலுத்தி கொண்டார். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு சில வாரங்கள் கழித்து 2வது டோஸ் எடுத்து கொள்ள வேண்டும்.

அதன்படி, பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை இன்று செலுத்தி கொண்டார். கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான வழிகளில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் ஒன்று. எனவே, தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்துவதற்காக புதுச்சேரியை சேர்ந்த பி. நிவேதா மற்றும் பஞ்சாப்பின் நிஷா சர்மா ஆகிய இரு செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள் முறைப்படி பிரதமருக்கு 2வது டோசை செலுத்தினர்.

அவர்களில் நிஷா சர்மா, பஞ்சாப்பின் சங்ரூர் பகுதியை சேர்ந்தவர். பிரதமரை சந்தித்ததும், அவருக்கு தடுப்பூசி செலுத்தியதும் மறக்க முடியாத தருணம் என தடுப்பூசி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிஷா கூறியுள்ளார்.

பிரதமருக்கு முதல் டோஸ் போடும் பணியில் ஈடுபட்ட நிவேதா, கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போட்ட நிஷா சர்மாவுக்கு உதவியாக இன்று செயல்பட்டார்.

இதுபற்றி நிவேதா கூறும்பொழுது, பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தினேன். இன்று 2வது முறையாக அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அவருக்கு 2வது டோஸ் போடும் பணியிலும் ஈடுபட்டேன். அதனால் மகிழ்ச்சி அடைந்தேன் என கூறியுள்ளார்.

அவர் எங்களுடன் பேசினார். அவருடன் சேர்ந்து நாங்கள் புகைப்படங்களும் எடுத்து கொண்டோம் என்றும் நிவேதா கூறியுள்ளார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க சாதனையாக இதுவரை 9 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com