

புதுடெல்லி,
இந்தியாவில்நேற்று காலை 7 மணி நிலவரப்படி 64 கோடியே 5 லட்சத்து 28 ஆயிரத்து 644 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 49 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 765 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 14 கோடியே 75 லட்சத்து 7 ஆயிரத்து 879 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதான அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டு முடித்து விட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி அல்பேனியாவுக்கு 50 ஆயிரம் தடுப்பூசியும், சிரியாவுக்கு 2.5 லட்சம் தடுப்பூசியும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது அரசியல் அடிப்படையிலான முடிவு, அறிவியல் அடிப்படையிலானது அல்ல என மத்திய அரசின் சார்ஸ் கோவ்-2 மரபியல் கூட்டமைப்பின் மத்திய அரசு ஆலோசனை குழு முன்னாள் தலைவர் பேராசிரியர் சாகித் ஜமீல் சாடினார்.
இதே போன்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்திருப்பதால் 91 நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரோ செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வயது வந்தோர் 100 சதவீதத்தினருக்கும் தடுப்பூசி போடப்படுகிற வரையில், எதிர்கால தடுப்பூசி திட்டத்துக்கு தடுப்பூசி கிடைக்கிற வரை இந்தியா ஏற்றுமதியை மீண்டும் தொடங்க வாய்ப்பு இல்லை.
நாட்டின் தற்போதைய கவனம், தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவது ஆகும். குறைந்த பட்சம், வயது வந்தோர் அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான கையிருப்பை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் நிலையில் நாடு இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.