

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமெடுத்ததை தொடர்ந்து தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது. தற்போது அதிக அளவில் உற்பத்தி மற்றும் உள்நாட்டு தேவைகள் வேகமாக பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்திய அரசின் தலைவர்களால் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் மற்ற நாடுகளுககான ஏற்றுமதி, உள்நாட்டின் தடுப்பூசி திட்டத்துக்கான தேவைகளை பாதிக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டின், பிற்பகுதியிலும் அதற்கு பிறகும், தாராளமான தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகங்கள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அது ஏற்றுமதிக்கு கிடைக்கும் எனவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார்.