

புதுடெல்லி,
அடுத்த சுற்றில் அரசியல்வாதிகள், மத்திய மந்திரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் களுக்கும் தடுப்பூசி போடும் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் கடந்த 16-ந்தேதி தொடங்கி உள்ளது.
முதல் கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் 1 கோடி டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் (போலீசார், ராணுவத்தினர், சுத்திகரிப்பு தொழிலாளர்கள் உள்ளிட்டோர்) தடுப்பூசி போடப்படுகிறது.
அடுத்த சுற்றில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அதற்கு குறைந்த வயதில் இணை நோயுடன் இருப்போருக்கும் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் பெரும்பான்மையோர் வருகின்றனர்.
எனவே இவர்களுக்கு அடுத்த சுற்றில் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதே போன்று மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், அரசியல்கட்சி தலைவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் அடுத்த சுற்றில் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடி, தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் தொடங்குவதற்கு முன்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்துரையாடியபோது, அரசியல்வாதிகள் யாரும் தடுப்பூசி போடுவதற்கு வரிசையில் இருந்து முந்த தேவையில்லை, முதல் சுற்றில் சுகாதார பணியாளர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும்தான் தடுப்பூசி போடப்படுகிறது என கூறியது நினைவுகூரத்தக்கது.