டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன - புதிய ஆய்வுத்தகவல்

டெல்டா போன்ற புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன - புதிய ஆய்வுத்தகவல்
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு தொடர்பாக சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பு, மேக்ஸ் ஆஸ்பத்திரியுடன் இணைந்து புதிய ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

இதில், 597 நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் அல்லது 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களில் 52 சதவீதத்தினர் ஏற்கனவே தொற்றுக்கு ஆளானவர்கள். 482 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள்.

இந்த ஆய்வு முடிவுகள், அறிவியல் பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* தடுப்பூசி போட்டபின்னரும் கொரோனா வருவதை புனே சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிற கோவிஷீல்டு தடுப்பூசி, போதுமான அளவுக்கு தடுப்பதில்லை. குறைவான செயல்திறனையே கொண்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டாலும் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடைமுறைகளை தொடர வேண்டிய அவசியம் உள்ளது.

* ஆரம்ப கால தரவுகள், கொரோனா தடுப்பூசிகள் போட்ட பின்னர் தொற்று பாதிப்பு வருவது அரிதானது, வைரஸ் அளவும் குறைவாக இருக்கும், தொற்றின் காலம் குறைவாக இருக்கும், பரவும் வாய்ப்பு குறைவு என்று காட்டின. ஆனால் சமீபத்திய தரவுகள், டெல்டா தொற்று அதிக வைரஸ்களைக் கொண்டுள்ளது, தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் இடையே வித்தியாசம் இல்லை என்று கூறுகின்றன. ஒன்றாக பார்த்தால், டெல்டா போன்ற புதிய வகை வைரஸ்களில், தடுப்பூசி போட்டாலும் தொற்று வரலாம், தொற்றை பரப்பும் சாத்தியம் உள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன.

* 2 டோஸ்களுடன் ஒப்பிடுகையில் ஒற்றை டோஸ் தடுப்பூசி பாதியளவு பாதுகாப்பையே தருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசிகள் இறப்பையும், நோய் தீவிரத்தையும் தடுக்கின்றன.

* இயற்கையான தொற்றானது தடுப்பூசிகளுக்கு ஊக்கமாக அமைகிறது. ஒற்றை டோஸ் தடுப்பூசிகூட ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுக்கு, 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட கூடுதலான நோய் எதிர்ப்புச்சக்தியை தூண்டுகிறது.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com