வைகுண்ட ஏகாதசி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் - தேவஸ்தான அதிகாரி தகவல்

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும், என திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
வைகுண்ட ஏகாதசி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் - தேவஸ்தான அதிகாரி தகவல்
Published on

திருமலை,

திருமலையில் உள்ள அன்னமயபவனில் தொலைப்பேசி மூலம் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி பங்கேற்று பேசினார்.

அவர் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்க உள்ளது. அதையொட்டி வருகிற 25-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும்.

கோவிலில் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை ஒரு மாதத்துக்கு சுப்ரபாதசேவை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாராயணம் செய்யப்படுகிறது. திருப்பாவை பாசுரம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நடக்கிறது. அதில் ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு பிரசாதங்கள் வீடு தேடி வந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என போலி இணையதளம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தகவலை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்த வேண்டும்.

திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் உள்ள சீனிவாசம், மாதவம் ஆகிய தங்கும் விடுதிகளில் 15-ந் தேதியில் இருந்து பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு கடந்த 10-ந்தேதியில் இருந்து ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com