ஜம்மு- ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்: பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு!

"என்ஜினீயரிங் அதிசயம்" என்று கூறப்பட்ட உலகிலேயே மிக உயரமான செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த செனாப் பாலப் பணிகள் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது.
ஜம்மு- ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்: பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு!
Published on

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருபெரும் முக்கிய நகரங்களான ஜம்மு- ஸ்ரீநகர் இடையே இன்று (மே 2) முதல் வந்தே பாரத் அதிவேக ரெயில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில்தான் பல மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில் ஓடிக் கொண்டிருக்கிறதே, அப்படி இருக்கும்போது காஷ்மீரில் வந்தே பாரத் ரெயில் ஓடுவதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று அனைவரும் நினைக்கலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆனாலும், இதுவரை வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை மட்டுமே இருந்து வந்தது. ரெயில் பாதை என்பது அவ்வளவு தூரத்திற்கு இல்லை. அதாவது, இமயமலையில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலப்பரப்பு சமமாக இல்லாததால், மலைகளுக்கும், பள்ளத்தாக்கிற்கும் இடையே ரெயில் பாதை அமைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

ரெயில் பாதை அமைப்பதில் சிக்கல்:

குறிப்பாக, அம்மாநிலத்தில் உள்ள உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா இடையே 272 கி.மீ. தொலைவுக்கு ரெயில் பாதை அமைப்பதில் பெரிய சிக்கல் நீடித்து வந்தது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங், இந்த வழித்தடத்தில் ரெயில் பாதையை அமைக்க ஆங்கிலேயே அரசை வலியுறுத்தினார். அப்போது, ஆய்வுகள் நடந்ததே தவிர வேறு எதுவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திராகாந்தி பிரதமராக இருந்த நேரத்தில், 1983-ம் ஆண்டு இந்த ரெயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இமயமலையை குடைந்து ரெயில் பாதைகள் அமைப்பது என்பது சாதாரண காரியமா?. 13 ஆண்டுகளில் 11 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே ரெயில் பாதை அமைக்க முடிந்தது. அதற்கே ரூ.300 கோடி செலவு செய்யப்பட்டது.

என்ஜினீயரிங் அதிசயம்:

அதன்பிறகு, பிரதமர்களாக வந்த தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் இந்த ரெயில் பாதை திட்டத்தை மீண்டும் தொடங்க முயற்சி மேற்கொண்டபோதும், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக, செனாப் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பது என்பது பெரிய சவாலாக இருந்தது. ஆனாலும், சாவாலை சமாளிக்கும் வகையில், கடந்த 2017-ம் ஆண்டு செனாப் ஆற்றின் குறுக்கே பிரமாண்ட இரும்பு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

கடும் குளிர், கடும் மழை, கடும் பனிமூட்டத்துக்கு இடையே 5 ஆண்டுகளாக நடைபெற்ற செனாப் பாலப் பணிகள் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது. "என்ஜினீயரிங் அதிசயம்" என்று கூறப்பட்ட உலகிலேயே மிக உயரமான ரெயில் பாலமாக செனாப் ஆற்றின் குறுக்கே கட்டிமுடிக்கப்பட்டது. 359 மீட்டர் உயரம், 1.31 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்ட இந்த இரும்பு பாலம், பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் அதிக உயரமாகும். இந்த பாலத்தின் திட்டமதிப்பீடு மட்டுமே ரூ.1,400 கோடியாகும்.

பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்:

சவாலாக இருந்த செனாப் பாலப் பணி முடிந்த நிலையில், உதம்பூர்- ஸ்ரீநகர்- பாராமுல்லா இடையே 272 கி.மீ. தூரத்திற்கான ரெயில் பாதை பணி ரூ.44 ஆயிரம் கோடி செலவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக வந்தே பாரத் ரெயிலை கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஆனால், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதியில் ரெயில் இயங்கும்போது, பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருந்ததால், வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் செல்லும் வகையில் இயக்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

ராணுவ வீரர்கள் பாதுகாப்பு:

தற்போது, வந்தே பாரத் ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் இன்று (சனிக்கிழமை) முதல் இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஜம்முவில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் 11.10 மணிக்கு ஸ்ரீநகரை சென்றடைகிறது. பயண நேரம் 4 மணி 50 நிமிடங்கள் ஆகும். இதே தூரத்தை சாலை மார்க்கமாக வாகனங்களில் கடக்க வேண்டும் என்றால், 7 மணி முதல் 8 மணி நேரம் ஆகும். அதுவும், மழை, பனிபொலிவு போன்ற அசாதாரண சூழ்நிலையில் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும். அதுவும் மலைப்பகுதியில் வளைந்து, நெளிந்து, ஏற்ற, இறக்கத்துடன் செல்லும் பாதையில் வாகனங்களை இயக்குவது என்பது கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.

அமோக வரவேற்பு:

இந்த நிலையில், வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் வரப்பிரசாதமாகும். இன்று பயணத்தை தொடங்கிய முதல் நாளிலேயே வந்தே பாரத் ரெயில் பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் நிரம்பி வழிந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலிலும் ஒரு சில இருக்கைகள் மட்டும் காலியாக உள்ளன. அதுவும் இன்னும் சற்று நேரத்தில் விற்று தீர்ந்துவிடும்.

புதிய அனுபவம்:

மொத்தத்தில், ஜம்மு- ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் பயணம் என்பது பயணிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். பயணத்தின்போது, பனிபடர்ந்த ஓங்கி உயர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள், பெரிய பள்ளத்தாக்குகள் என இயற்கை அழகை ரசித்துக் கொண்டே செல்ல முடியும் என்பதால், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். பனிபடர்ந்த மலைகளுக்கு இடையே இந்த வந்தே பாரத் ரெயில் இயங்குவதால், குளிரில் இருந்து பயணிகள் தப்பிக்க, ரெயிலின் உள்ளே ஹீட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, நம் ஊரில் ஓடும் வந்தே பாரத் ரெயிலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது போல், காஷ்மீரில் ஓடும் வந்தே பாரத் ரெயிலில் வெப்பக் காற்று வரும் வகையில் ஹீட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com