வந்தே மாதரம் பாடல் விவாதம்: மக்களவையில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

பிரதமரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறார்.
FILEPIC
FILEPIC
Published on

புதுடெல்லி,

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870-களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை அமைத்தார். இது 1905-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆனதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி தேசிய பாடலாக இது அங்கீகரிக்கப்பட்டது.

இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கடந்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பேசினார். அவரது உரையில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு இருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது. "தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதம்" என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டு இருக்கும் இந்த விவாதத்தை பிரதமர் மோடி நாளை மக்களவையில் தொடங்கி வைக்கிறார்.

பிரதமரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறார். அதன்பிறகு பிற கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். மக்களவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com