

புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 14 இடங்கள் என முடிவு செய்யப்பட்டது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 23-ந்தேதி முடிவடைந்தது. அதுவரை கூட்டணி முடிவு செய்யாததால் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 30 தொகுதிகளிலும் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்பின்னர் பேச்சுவார்த்தையில் தொகுதி பிரிப்பதில் உடன்பாடு ஏற்பட்டு, இரு கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கிய தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனை கடந்த 2 நாட்களாக நடந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில் புதுச்சேரியில் ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை என 3 தொகுதிகளில் வி.சி.க. போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியை மட்டுமே வி.சி.க.விற்கு தி.மு.க. ஒதுக்கியிருந்தது. ஆனால் 3 தொகுதிகளில் வி.சி.க. வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது. ஊசுடு தொகுதியில் அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன், நெட்டப்பாக்கத்தில் அமுதவன், உழவர்கரையில் செல்வ.புஷ்பலதா ஆகியோர் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2001-ம் ஆண்டு 2 தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டோம். கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது.
கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில் அப்போது அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும், சுமார் 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்றோம். தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை. தி.மு.க. தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்த போதிலும் வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகும் கூட அது எந்தத்தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இதுவரை எந்த தொகுதி என்பதே தெரியாத நிலையில் எமது கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.