

புதுடெல்லி,
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக அளவில் அன்னிய செலாவணி தேவைப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசும் அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மரபு சார்ந்த எரிபொருளை (பெட்ரோல், டீசல்) பயன்படுத்தும் வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வரைவு அறிவிக்கை ஒன்றை தயாரித்து உள்ளது. அந்த வரைவு அறிவிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட உத்தேச கட்டண உயர்வு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, இரு சக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணம் தற்போதுள்ள 50 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். இதேபோல் புதுப்பித்தல் கட்டணம் 50 ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், புதுப்பித்தல் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது.
கார், ஜீப்களுக்கான பதிவு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், புதுப்பித்தல் கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுகிறது.
இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், புதுப்பித்தல் கட்டணத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரூ.1,500-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், புதுப்பித்தல் கட்டணத்தை ரூ.1,500-ல் இருந்து ரூ.40 ஆயிரமாகவும் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவு கட்டணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இறக்குமதி செய்யப்படும் பிற வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பரிந்துரைக்கப்பட்ட கட்டண உயர்வு பற்றி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என்றும், அதன்பிறகு கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.