

புதுடெல்லி,
துணை ஜனாதிபதி பதவிக்காலம் முடிவதையடுத்து ஹமீது அன்சாரி அளித்த பேட்டியில், முஸ்லிம்களிடையே அமைதியின்மையும், பாதுகாப்பின்மை உணர்வும் ஏற்பட்டுள்ளது. ஏற்புடைமை என்பது தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது என்றார். ஹமீது அன்சாரி நாட்டில் முஸ்லிம்கள் நிலை குறித்து கூறிய கருத்து பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹமீது அன்சாரியின் கருத்துகளுக்கு பாரதீய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமித் அன்சாரி கருத்து சிறுமையானது என பா.ஜனதா விமர்சனம் செய்து உள்ளது.
ஹமீது அன்சாரி இன்னும் துணை ஜனாதிபதிதான். இத்தகைய கருத்துக்கள் அவரது உயர்பதவிக்கு கண்ணியம் சேர்ப்பதாக இல்லை. அவர் ஓய்வுக்கு பின்னர் அரசியல் புகலிடம் தேடுவதற்காகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. உயர் பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து இப்படிப்பட்ட சிறிய கருத்துகளை யாரும் எதிர்பார்க்கவில்லை, என விமர்சனம் செய்து உள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா.
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஹமீது அன்சாரியின் கருத்து அரசியல் கொள்கை பிரசாரம் என விமர்சனம் செய்து உள்ளார் வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு செய்தி நிறுவனத்திற்கு அளித்து உள்ள பேட்டியில், இந்தியா மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட நாடு. ஒவ்வொருவரும் மற்றவருக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கலாச்சாரம். சிறுபான்மையினருக்கு இங்கே பாதுகாப்பு இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். சிறுபான்மை விவகாரத்தை அரசியலுக்காக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது அரசியல் கொள்கை பிரசாரம். ஒட்டுமொத்த உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிறுபான்மையினர் இந்தியாவில்தான் கூடுதல் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கான உரிமையைப் பெறுகின்றனர்.
சிறுபான்மையினரிடம் பாரபட்சம் பார்ப்பதில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது என கூறிஉள்ளார்.