சல்மான்கான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

மான் வேட்டையாடிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சல்மான்கான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #BlackBuckPaochingCase
சல்மான்கான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
Published on

ஜோத்பூர்,

அரியவகை மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜோத்பூரில் உள்ள மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டுள்ளார். சல்மான் கான் தரப்பில் ஜோத்பூரில் உள்ள மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி, வழக்குத் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்திடம் இருக்கும் கோப்பு விவரங்களை தாக்கல் செய்ய கோரினார். இதைத் தொடர்ந்து, சல்மான் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருக்கும் மனு மீது சனிக்கிழமை(இன்று) முடிவு செய்யப்படும் என்று நீதிபதி ஜோஷி தெரிவித்து இருந்தார். இதன்படி இன்று காலை ஜாமீன் மனு மீது விசாரணை துவங்கியது. சல்மான் கான் தரப்பு தனது வாதங்களை எடுத்துரைத்தது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான உத்தரவு பிற்பகல் வெளியாகும் என தெரிகிறது.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சல்மான் கான் தரப்பு வழக்கறிஞர், தங்கள் தரப்பு வாதங்களை முடித்துக்கொண்டதாகவும் மதிய உணவு இடைவேளைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று அம்மாநிலத்தில் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். சல்மான்கான் ஜாமீன் மனுவை விசாரித்து வரும் நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷியும் இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் ஆவார். இதனால், இன்று ஜாமீன் மனுவை அவர் விசாரணைக்கு எடுத்துக்கொள்வாரா? அல்லது புதிய நீதிபதி விசாரணை செய்வாரா? என சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், இடமாற்றம் செய்யப்பட்டாலும் ஒரு நீதிபதி தன்னை விடுவித்துக்கொள்ள 7 நாட்கள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்பதால், நீதிபதி ரவீந்தர குமார் ஜோஷியே இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com