நடிகை விஜயசாந்தி நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

நடிகை விஜயசாந்தி நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை விஜயசாந்தி நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
Published on

ஐதராபாத்,

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் விஜயசாந்தியும் ஒருவர். இவர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1998-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அப்போது அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.

அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். 2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விஜயசாந்தி இன்று விலகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் நாளை பாஜகவில் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக நடிகை விஜயசாந்தி நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் நாளை அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com