

பெங்களூரு,
கால்நடை டாக்டர்கள் தேர்வு முறைகேடு குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திரகுமார் திடீரென தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருபவர் ஞானேந்திரகுமார். இவர், கர்நாடக தொழில் துறையில் எம்.எஸ்.எம்.இ. இயக்குனராக தற்போது பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி இருந்தார். இவரது தலைமையில் தான் கால்நடை டாக்டர்கள் பணி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றிருந்தது.
இந்த நிலையில், கடந்த 20-ந் தேதியில் இருந்து அதிகாரி ஞானேந்திரகுமார் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஞானேந்திரகுமார் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அவர் தனது குடும்பத்தினரையோ அல்லது தன்னுடன் வேலை செய்து வரும் அதிகாரிகளுடனோ தொடர்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கால்நடை டாக்டர்கள் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். தேர்வு முறைகேடு தொடர்பாக கால்நடை டாக்டர்கள் தேர்வை எழுதியவர்களிடமும் அதிகாரிகள் விசாரித்து தகவல்களை பெற்றிருந்தனர். இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பயந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திரகுமார் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 20-ந் தேதி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது. அதாவது பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் பயணிக்க 1 மணி 31 நிமிடங்களுக்கு முன்பாக தான் விமான டிக்கெட்டை அவசரமாக பதிவு செய்துள்ளார். அதற்காக அவர் ரூ.30,253 விமான கட்டணத்தை தனது எச்.டி.எப்.சி. வங்கியின் கிரடிட் கார்டு மூலம் செலுத்தியிருந்ததும் தெரியவந்தது.
மேலும் டெல்லி விமான நிலையத்தில் வைத்து தான் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததும். அதன் பிறகு தான் ஞானேந்திரகுமார் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஞானேந்திரகுமார் மாயமாகி இருப்பது பற்றி, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. என்றாலும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் திடீரென தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அவரை தேடும் நடவடிக்கையில் போலீசாரும், அமலாக்கத்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.