பா.ஜனதாவின் அரசியல் லாபத்திற்காக விஷ்வ இந்து பரிஷத் மக்களை முட்டாளாக்குகிறது -தலைமை அர்ச்சகர் ஆவேசம்

அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் விவகாரத்தில் பா.ஜனதாவின் அரசியல் லாபத்திற்காக விஷ்வ இந்து பரிஷத் மக்களை முட்டாளாக்குகிறது என தலைமை அர்ச்சகர் ஆவேசமாக பேசியுள்ளார்.
பா.ஜனதாவின் அரசியல் லாபத்திற்காக விஷ்வ இந்து பரிஷத் மக்களை முட்டாளாக்குகிறது -தலைமை அர்ச்சகர் ஆவேசம்
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அங்கு 2 நாள் மாநாடு நடந்தது.

மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான இந்து மத ஆன்மிக தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், துறவிகள், ராம பக்தர்கள் என 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அதிரடிப்படையினர், கமாண்டோ படையினர் உள்பட 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மாநாட்டில் பேசிய நிர்மோஹி அஹாரா அமைப்பைச் சேர்ந்த சாமியார் ராம்ஜி தாஸ், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை பிரயாக் ராஜ் (அலகாபாத்) நகரில் ஜனவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் 4-ந் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் அறிவிப்போம் என்றார். இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பா.ஜனதாவின் அரசியல் லாபத்திற்காக விஷ்வ இந்து பரிஷத் மக்களை முட்டாளாக்குகிறது என தலைமை அர்ச்சகர் ஆவேசமாக பேசியுள்ளார்.

ராம ஜென்மபூமியில் 1992-ம் ஆண்டு ராமர் சிலை வைக்கப்பட்டதிலிருந்து பூஜை செய்யும் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்திய கூட்டம் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பதற்காகதான். வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட கூட்டம். ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் கொண்டவன் நான். ஆனால் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை.

விஎச்பி தன்னை பலமான அமைப்பாக மக்களிடம் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள போது எந்தவிதமான கட்டுமான பணிகளையும் சர்ச்சைக்குரிய பகுதியில் மேற்கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி சர்ச்சைக்குரிய பகுதியில் ஒரு செங்கல்லை எடுத்து வைக்க முடியுமா? என்று விஎச்பிக்கு சவால் விடுக்கிறேன். விஷ்வ இந்து பரிஷத் இந்துக்களையும், ராம பக்தர்களையும் ஏமாற்றி பா.ஜனதாவிற்கு உதவிசெய்ய முயற்சிக்கிறது. கோவில் கட்டுவதற்காக வரும் கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அவசரச்சட்டம் கொண்டுவந்து, ராமர் கோவில் கட்டும் திட்டத்தை பா.ஜனதா வேகப்படுத்தும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ள சத்யேந்திர தாஸ், இப்போது ராமர் பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அனைத்தும் ராம பக்தர்களை ஏமாற்றி 2019-திலும் பா.ஜனதாவை ஆட்சியில் அமரவைக்கும் முயற்சிதான் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com