

ஆமதாபாத்,
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா மீது ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் போலீசில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக ராஜஸ்தான் மாநில போலீசார், குஜராத் வந்தனர். குஜராத் மாநில சோலா போலீஸ் நிலையம் வந்த அவர்கள், அம்மாநில போலீசாருடன் தொகாடியாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு பிரவீன் தொகாடியாவை காணாததால் போலீசார் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் சோலா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பிரவீன் தொகாடியாவை காலை 10 மணி முதல் காணவில்லை என்றும், அவரது பாதுகாப்பு மற்றும் அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் கோஷமிட்டனர். தொகாடியாவை கைது செய்தனரா? என்பதை போலீசார் உறுதியாக தெரியவிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதைப்போல தொகாடியாவை ராஜஸ்தான் போலீசார் பிடித்து சென்றதாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஜெய்ஷாவும் குற்றம் சாட்டினார்.
ஆனால் பிரவீன் தொகாடியாவை போலீசார் கைது செய்யவில்லை என ஆமதாபாத் போலீஸ் கூறிஉள்ளது.
ராஜஸ்தான் போலீசாரும் வெறுங்கையுடனே திரும்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு போலீசாரும் மறுத்துள்ளதால் பிரவீன் தொகாடியா என்ன ஆனார்? என்பது குறித்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே அவரை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என ஆமதாபாத் போலீஸ் தெரிவித்து உள்ளது. ஆமதாபாத் கமிஷ்னர் ஜே கே பாட் பேசுகையில், நாங்கள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். காலை 10:45 மணியளவில் அவர் அவருடைய அலுவலகத்தில் இருந்து சென்று உள்ளார். தொகடியாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆட்டோவில் ஒருவருடன் தொகாடியா சென்ற போது அவருடன் பாதுகாவலர்கள் இல்லை.
குஜராத் மாநிலத்திற்கு கைது வாரண்டுடன் வந்த ராஜஸ்தான் போலீசுக்கு உதவி செய்தோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.
குஜராத் மாநில போலீஸ் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது, என கூறினார்.