

திருவனந்தபுரம்,
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக கேரளாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தநிலையில், வனப்பகுதியில் மனித தொடர்பு இல்லாமல் சுற்றி திரியும் காட்டுயானைகளை கண்காணிக்கவும் யானைகளுக்கு இடையே நடக்கும் மோதலை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ட்ரோனை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ட்ரோன் யானைகளை அமைதிப்படுத்தி மிக துல்லியமாக காட்டிற்குள் பாதுக்காப்பாக விரட்டும் வேலையை செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வன ஊழியர்களுக்கு காட்டுப்பகுதியில் ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் யானைகளுக்குள் நடக்கும் மோதல்களையும் கண்காணித்து அதற்குரிய தீர்வுகாண இந்த ட்ரோன் உதவும்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே, கருடா ஏரோஸ்பேஸ் (Garuda Aerospace) நிறுவனம் தமிழ்நாடு வனத்துறையினருக்காக முதல் ட்ரோனை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த காலங்களில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) உள்ளிட்ட முன்னணி பாதுகாப்பு அமைப்புகளுக்கும், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வனத்துறைகளுக்கும் அதிகமான ட்ரோன்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.