துரித உணவுகளை தவிர்க்குமாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்

பீட்சா, பர்கரை தவிர்த்து பாரம்பரிய உணவை உண்ணுங்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துரித உணவுகளை தவிர்க்குமாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்
Published on

பெங்களூரு,

பெங்களூரு ராஜ்பவனில் மத்திய அரசின் திட்டம்-புள்ளியல் துறை, கிவ் இந்தியா சார்பில் தடுப்பூசி செலுத்துங்கள் திட்ட தொடக்க விழா நடந்தது. இந்த விழாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், இந்திய பாரம்பரிய உணவுகளை நாம் உண்ண வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

உடல் நல ஆரோக்கியத்தை பராமரிக்க துரித மற்றும் சத்து இல்லா உணவுகளை தவிர்த்து, இந்திய பாரம்பரிய உணவுகளை மக்கள் உண்ண வேண்டும். துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாரம்பரிய, உள்ளூர் உணவுகளை உண்ணுங்கள். நம் முன்னோர்கள் பரிந்துரைத்து, ஊக்குவித்து நமக்கு அழகான உணவு வகைகளை வழங்கி உள்ளனர். நான் கர்நாடகத்தில் உள்ளேன். இங்கு எந்த வகை உணவு வகைகள் உள்ளன என்பதை நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. இங்குள்ள பாரம்பரிய உணவு உலக புகழ்பெற்று உள்ளது.

நம்முடைய பாரம்பரிய உணவு இருக்கும்போது ஏன் பீட்சா, பர்கர் போன்ற சத்து இல்லாத துரித உணவுகள் பின்னால் ஓட வேண்டும். பீட்சா, பர்கர் போன்ற சில துரித உணவு வகைகள் வெளிநாடுகளின் நிலைமைக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் அவை இந்திய நிலைமைகளுக்கு ஏற்றவை அல்ல. அவை நம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. சில நிறுவனங்கள் சந்தைப்படுத்தி நாடு முழுவதும் அந்த உணவுகளை பிரபலமாக்கியது. அதில் இருந்து நாம் விடுபட வேண்டும். பீட்சா, பர்கரை தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள்.

சிக்கன் மஞ்சூரியன், சிக்கன்-65 போன்ற துரித உணவுகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் சொந்தமாக தயாரிக்கும் பிரியாணி இருக்கும்போது மஞ்சூரியன் எதற்காக சாப்பிட வேண்டும். கர்நாடகத்தில் அற்புதமான ராகி முத்தே (களி உருண்டை) மற்றும் நாட்டு கோழி குழம்பு இருக்கும்போது, நாம் ஏன் சிக்கன் மஞ்சூரியன், சிக்கன்-65 பின்னால் ஓட வேண்டும். தயவு செய்து மக்கள் இந்திய பாரம்பரிய உணவு வகைகளை பின்பற்றுங்கள். அவை தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கான செல்வம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com