துணை ஜனாதிபதி தேர்தல்: சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி - இருமுனைப் போட்டி உறுதியானது

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
புதுடெல்லி,
நாட்டின் முதல் குடிமகன் என்று ஜனாதிபதி சிறப்பிக்கப்படுவதுபோல், 2-வது குடிமகன் என்று கவுரவிக்கப்படுபவர், துணை ஜனாதிபதி. அந்த வகையில், நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக இருந்து வந்த ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த மாதம் (ஜூலை) 21-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து, புதிதாக துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி நிறைவு பெற்றது.
இதில் ஆளும் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி சுயேச்சையாகவும் பலர் மனுதாக்கல் செய்தனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் கே.பத்மராஜன், நூர் முகமது உள்ளிட்டோரும் மனுதாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் நாயகம் செயல்படுகிறார். தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகிய இரு வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் சரியாக இருப்பது கண்டறியப்பட்டு ஏற்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
50-க்கும் மேற்பட்ட சுயேச்சை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவர்கள் செலுத்திய முன்வைப்பு தொகை தேர்தலுக்கு பிறகு திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 25-ந் தேதி கடைசி நாள் ஆகும். இருவரது மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டு உள்ளதால் இருமுனைப் போட்டி உறுதியாகி உள்ளது.






