நாளை துணை ஜனாதிபதி தேர்தல்.. எம்.பி.க்களுக்கு வாக்களிப்பது குறித்து பயிற்சி


நாளை துணை ஜனாதிபதி தேர்தல்.. எம்.பி.க்களுக்கு வாக்களிப்பது குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 8 Sept 2025 5:56 AM IST (Updated: 8 Sept 2025 10:01 AM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தங்கள் எம்.பி.க்களுக்கு வாக்களிக்க பயிற்சி அளிக்கின்றன.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

இந்தநிலையில் இருமுனைப் போட்டி உறுதியானதை தொடர்ந்து இரு தரப்பினரும் ஆதரவு திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். துணை ஜனாதிபதி தேர்தலானது தேர்தல் கல்லூரி வாக்காளர்களால் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களே வாக்காளர்களாக இருப்பார்கள்.

தேர்தல் கமிஷனின் அறிவிப்புபடி நாடாளுமன்ற இரு அவைகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 788 ஆகும். தற்போது மாநிலங்களவையின் 245 உறுப்பினர் இடங்களில் 5 இடங்கள் காலியாக உள்ளன. மக்களவையின் 543 இடங்களில் ஒரு இடம் காலியாக இருக்கிறது. இதனால் தற்போது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது.

இதில் ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கு மக்களவையில் 240 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 99 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுடன் கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் சேர்த்தால் 450-க்கு மேல் வரும். இதனால் வெற்றி வாய்ப்பு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, இந்த தேர்தல் ‘‘சித்தாந்த போர்’’ என குறிப்பிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. விடிந்தால் தேர்தல் என்ற நிலை இருப்பதால் இரு அணியினரும் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் முழு வீச்சாக உள்ளனர்.

ஆளும் பா.ஜனதா கட்சி தனது எம்.பி.க்களுக்கு 2 நாள் பயிற்சிக் கூட்டத்தை டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். ஒரு சாதாரண தொண்டரைப் போல கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்தார். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி போன்றவை பற்றி பேசப்பட்டது. தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதுபோல இந்தியா கூட்டணியும், கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு வாக்களிப்பு ஒத்திகை பயிற்சியை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு நடத்துகிறது. முன்னதாக வாக்களிப்பு குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இரவு விருந்து அளிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு பிரச்சினை நிலவி வருவதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதுபோல தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடியும், பா.ஜனதா எம்.பி.க்களுக்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் விருந்து அளிக்க திட்டமிட்டு இருந்தனர் இதுவும் வெள்ள பாதிப்பு காரணமாக மறுபரிசீலனை செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று இரவு தெரிவித்தார்.

1 More update

Next Story