குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி; வெங்கய்யா நாயுடுவுக்கு தலைவர்கள் வாழ்த்து

குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி; வெங்கய்யா நாயுடுவுக்கு தலைவர்கள் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரதீய ஜனதா வேட்பாளர் வெங்கய்யா நாயுடு 516 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், பாரதீய ஜனதாவின் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. அம்மா அணியின் டி.டி.வி. தினகரனும் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், வெங்கய்யாவுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர், மாநிலங்களவை தலைவராக வெங்கய்யாவை வரவேற்கிறோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சவால் மிக்க மாநிலங்களவையை வழிநடத்த கூடியவர் என தமிழிசை வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

விவசாய குடும்பத்தில் பிறந்து நாட்டின் உயர் பதவிக்கு தேர்வான வெங்கய்யாவுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

வெங்கய்யாவுக்கு ஆந்திர பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com