

போபால்,
மத்திய பிரதேச மாநிலம். ரத்லம் மாவட்டதில் உள்ள நந்த்லெட்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கன்சியாம் நாத். இவரது 4 வயது மகள் ஜீஜா நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். அவளை பெற்றோர் உள்ளூர் சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு முதல் உதவி அளித்துவிட்டு, மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர் பரிந்துரை செய்தார்.
ஆனால் அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ரத்லம் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அந்த சிறுமியை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.
உடனே கன்சியாம் நாத் தனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை இரவலாக பெற்றார்.
குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மகளை தாய் வைத்துக்கொண்டு பின் இருக்கையில் அமர, கன்சியாம் நாத் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். ஆனால் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
அங்கு இருந்து சிறுமியின் உடலை எடுத்துச்செல்வதற்கும் அமரர் ஊர்தி கிடைக்கவில்லை. இதையடுத்து குழந்தையின் உடலை மோட்டார் சைக்கிளிலேயே வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இது குறித்து கன்சியாம் நாத் நிருபர்களை சந்தித்து உருக்கமுடன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.