திருப்பதி கோவில் மேலே டிரோன் பறந்ததாக வீடியோ பரவல்: பாதுகாப்பு குறைபாடு என குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே டிரோன் பறந்ததாக வீடியோ பரவி வருகிறது. பாதுகாப்பு குறைபாடு, எனப் பக்தர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே ஆகம சாஸ்திர படி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானம் (டிரோன்) ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் 24 மணிநேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேலே பறக்கும் டிரோன் உள்ளிட்டவைகளை சுட்டு வீழ்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 1 நிமிடம் 11 வினாடிகள் ஓடக்கூடிய 'டிரோன் ஷாட்ஸ்' என்ற தலைப்பில் 'யூடியூப்' மற்றும் 'இன்ஸ்டாகிராமில்' வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் திருப்பதி பேடிஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கொல்ல மண்டபம், மகா துவாரம், ஆனந்த நிலையம், வசந்த மண்டபம் வரை கோவிலுக்கு மேலே தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது உண்மையான வீடியோ என்றால் பாதுகாப்புப்படையினரின் பலவீனத்தை காட்டுகிறது என்றும், பாதுகாப்பு குறைபாடு என்றும் பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி இருந்தும் கோவில் மேலே பறந்த டிரோன் பாதுகாப்புப்படை வீரர்களின் கண்களில் படவில்லையா அல்லது கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களா? எனப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. பதிவிடப்பட்டுள்ள வீடியோ தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்ம கிஷோர் கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வைரல் வீடியோ காட்சி ஆதாரமற்றது. இருப்பினும், அது தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து சரிபார்க்கப்படும். திருமலை முழுவதும் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரிகள், ஊழியர்கள் கழுகு பார்வை போல் கண்காணித்து வருகிறார்கள்.

டிரோன் கேமரா மூலம் ஏழுமலையான் கோவிலை படம் பிடிக்கவோ, வீடியோ எடுத்து வெளியிடவோ முடியாது. ஏழுமலையான் கோவிலை வீடியோ எடுத்தவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com