

மும்பை,
இந்தியாவின் பிற மாநிலங்களை போன்று மராட்டியத்திலும் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.
பல்வேறு இடங்களில் குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாத்து கொள்ளும்படியும் வதந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியுடன் காணப்பட்டு வந்தனர். இந்தநிலையில் துலே மாவட்டம் ரெயின்படா கிராமத்தில் ஞாயிறு அன்று வாரச்சந்தை நடைபெற்ற போது அங்கு வந்த சிலரை குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக நினைத்த கிராம மக்கள், 5 பேரை சரமாரியாக அடித்து கொலை செய்தனர்.
அவர்கள் வாரச்சந்தை நடைபெறுவதால் யாசகம் கேட்கவே அங்கு சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக 20-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். கும்பல் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்ததும் அங்கு சென்ற போலீஸ் அவர்களுடைய சடலத்தை மீட்டது. அப்போது கிராம மக்கள் இருவரது சடலத்தை போலீசிடம் கேட்டுள்ளனர், நாங்கள் அவர்கள் இறந்துவிட்டனரா என்பதை சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீஸ் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் சிரியாவில் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக வெளியான வீடியோவே அவர்கள் அடித்துக் கொலை செய்யப்படுவதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. வீடியோவில் குழந்தைகள் இறந்து கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால் குழந்தைகள் கடத்தப்பட்டு, உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற குறிப்பு இந்தி மொழியில் இடம்பெற்று இருந்துள்ளது. வீடியோவில் குழந்தைகள் இறந்து கிடக்கும் காட்சி, சிரியாவில் 5 வருடங்களுக்கு முன்னர் விஷவாயு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பானது. இதுபோன்று வெளிநாடுகளில் நடந்த சம்பவங்களையும் இந்தியாவில் நடைபெறுவதாக போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.