பார்வையாளர்கள் புத்தகத்தில் கருத்து: காந்தியை பற்றி டிரம்ப் குறிப்பிடாததால் சர்ச்சை

காந்தியை பற்றி டிரம்ப் பார்வையாளர்கள் புத்தகத்தில் கருத்து குறிப்பிடாததால் சர்ச்சை எழுந்துள்ளது.
பார்வையாளர்கள் புத்தகத்தில் கருத்து: காந்தியை பற்றி டிரம்ப் குறிப்பிடாததால் சர்ச்சை
Published on

ஆமதாபாத்,

ஆமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அங்கு வைக்கப்பட்டு இருந்து பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார். இந்த அற்புதமான வருகைக்கு ஏற்பாடு செய்ததற்காக எனது மிகச்சிறந்த நண்பரான மோடிக்கு நன்றி என்று அதில் எழுதி அவர் கையெழுத்திட்டார். மெலனியாவும் அதில் கையெழுத்திட்டார்.

சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் தலைவர்கள் அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதும்போது மகாத்மா காந்தி பற்றி குறிப்பிட தவறுவது இல்லை. ஆனால் நேற்று டிரம்ப் பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதும்போது மகாத்மா காந்தி பற்றி எதுவும் எழுதவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் தெரிவித்து நெட்டிசன்கள் பலர் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.

முன்பு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா இந்தியா வந்த போது, பார்வையாளர்கள் புத்தகத்தில் மகாத்மா காந்தி பற்றி குறிப்பிட்டு எழுதியதையும், டிரம்ப் சபர்மதி ஆசிரம பார்வையாளர்கள் புத்தகத்தில் காந்தி பற்றி எழுதாததையும் ஒப்பிட்டு டுவிட்டரில் பலர் விமர்சித்து இருக்கிறார்கள்.

மும்பையில் மகாத்மா காந்தி சிறிது காலம் தங்கி இருந்த மணி பவனுக்கு சென்ற ஒபாமா காந்தியை பற்றி பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதி உள்ளார். ஆனால் இப்போது சபர்மதி ஆசிரம பார்வையாளர்கள் புத்தகத்தில் டிரம்ப் காந்தியை பற்றி எதுவுமே எழுதவில்லை என்று டுவிட்டரில் ஒருவர் குறிப்பிட்டு உள்ளார். பார்வையாளர்கள் புத்தகத்தில் டிரம்ப், மகாத்மா காந்தியை பற்றி எழுதாமல், மோடியின் மீதான அன்பை வெளிப்படுத்தி இருப்பதாக திரிபுரா முன்னாள் எம்.எல்.ஏ. தபஸ் தேய் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com