புதுவையை பார்த்து தமிழக முதல் அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும்: விஜய் பரபரப்பு பேச்சு
விஜய் வருகை தந்த நிலையில் கூட்டம் இல்லாததால், பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
புதுச்சேரி,
தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழகம் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வாகனத்தில் நின்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று இருப்பார்கள். நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான். நாம் பார்க்கும்போது பாச உணர்வு, அதுமட்டும் இருந்தால் போதும். உலகில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான். பாரதியார் இருந்த மண். பாரதிதாசன் பிறந்த மண்.
1977-ல் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 1974-ல் புதுச்சேரியில் அவரது ஆட்சி அமைந்தது. அவர்கள்தான் அலெட் செய்தனர். புதுச்சேரி மக்கள் 30 ஆண்டுகளாக தாங்கி பிடிக்கிறீர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்.
தமிழக அரசு போல் புதுச்சேரி அரசு கிடையாது. நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர். புதுச்சேரி முதல்-மந்திரிக்கு நன்றி. இதைப் பார்த்து தமிழக முதல்-அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரி அரசை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநில அரசாக மாற்ற தீர்மானம் போட்டு அனுப்பினாலும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை.
மூடிய மில்களை திறக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. காரைக்கால் மாஹி, ஏனம் பகுதியில் முன்னேற்றமே இல்லை. புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் ரெயில் திட்டம் வேண்டும். புதுச்சேரி மக்களிடம் சொல்கிறேன். தி.மு.க.வை நம்பாதீங்க. நம்பவைத்து ஏமாற்றுவார்கள். மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி இடம்பெறவில்லை. அதனால், போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. வெளியே கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது. தொழில் வளர்ச்சியும் வேண்டும். இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். மற்ற மாநிலங்களைப் போல் இங்கும் ரேசன் கடைகளை தொடங்கி மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க வேண்டும். காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும். புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்









