பாஜகவை எதிரி என சொல்வதற்கு விஜய்க்கு அருகதை இல்லை: வி.பி.ராமலிங்கம் சாடல்

விஜய்க்கு எந்த ஒரு கொள்கையும் இருப்பதாக தெரியவில்லை என்று புதுச்சேரி பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விஜய்யால் புதுச்சேரியில் எந்த ஒரு மாற்றமும் வராது. அவர் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல. ரசிகர்களின் மாநாடு. கூட்டத்தை சேர்ப்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் படங்களை வைத்து அவர் மாநாடு நடத்தினார். எம்.ஜி.ஆர். மற்றும் விஜயகாந்தின் கொள்கைகளை பின்பற்ற அவர்களது கட்சிகள் இருக்கும்போது விஜய் ஏன் அவர்கள் கொள்கைகளை கூற வேண்டும்?.
விஜய்க்கு எந்த ஒரு கொள்கையும் இருப்பதாக தெரியவில்லை. சினிமாவில் பணம் சேர்த்து விட்டோம். இனி அரசியலுக்கு வருவோம் என வந்துள்ளார். பாஜகவை எதிரி என சொல்வதற்கு அவருக்கு அருகதை இல்லை. சினிமா வசனத்தை போல் மாண்புமிகு என்று சொல்லக்கூடிய தமிழக முதல்-அமைச்சரை ‘அங்கிள்’ என்று விஜய் கூறி இருக்கிறார். இதை எப்படி திமுகவினர் பொறுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
விஜய்யுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி நெருக்கம் காட்டுவது பற்றி கேட்கிறார்கள். ரங்கசாமி விஜய்யுடன் பேசுவதால் மட்டும் அவர் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்வார் என்று கூற முடியாது. எந்த அரசு மக்களுக்கு நல்லது செய்யும் என்று புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு ரங்கசாமி புத்திசாலி. விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாது. அவருக்கு எத்தனை சதவீத வாக்குகள் என்பது இந்த தேர்தலில்தான் தெரியும். அவருடன் நட்பு ரீதியாக பேசுவாரே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் ரங்கசாமி நீடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.






