

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உண்டு. ஆனால் நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டு, அதை விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை மந்திரி உத்தரவிடுவார். அவர் உத்தரவிட்ட 28 நாளில் அவர் நாடு கடத்தப்பட்டு விடுவார்.
விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு விட்டால் அவரை அடைப்பதற்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக விஜய் மல்லையா பேசுகையில், என்னுடைய சட்டத்துறை குழு தீர்ப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்யும். பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வு செய்யும். அதன் பின்னர் என்னுடைய நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு முன்னதாக மல்லையா பேசுகையில், நான் யாருடைய பணத்தையும் திருடவில்லை, பணத்தை திரும்ப செலுத்துவேன் என்பது யாரையும் ஏமாற்றும் நடவடிக்கை கிடையாது என்று கூறினார்.