ஜே.என்.யூ சம்பவம் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துகிறது ; காங்கிரஸ் கடும் விமர்சனம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துகிறது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
ஜே.என்.யூ சம்பவம் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துகிறது ; காங்கிரஸ் கடும் விமர்சனம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கியது. இந்த தாக்குதலில், மாணவர் சங்க தலைவர் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துகிறது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், இளைஞர்களுக்கு மத்தியில் நீங்கள் ஏன், பகைமையை உருவாக்குகிறீர்கள்.

இளைஞர்களின் குரலை எந்த அளவுக்கு நீங்கள் ஒடுக்குகிறீர்களோ, அந்த அளவுக்கு அது வீறு கொண்டு எழும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறை 90 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாஜி ஆட்சியை நினைவுப்படுத்துகிறது" என்றார்.

மேலும், முகமூடி அணிந்த சமூக விரோத கும்பலால் மாணவர்கள் தாக்கப்படும் போது, டெல்லி போலீஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com