

மங்களூரு,
உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. சாம்பல் மாவட்டம் சவுத்ரி சாராய் பகுதியில் ஒரு அரசு பஸ்சுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சாம்பால் மாவட்டத்தில் இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டது.
லக்னோவிலும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு போலீஸ் நிலையம் வெளியே நின்றிருந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியும், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீவைத்தும் ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டது. மடேய்கஞ்ச் பகுதியில் நடந்த இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 பேர் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது பெயர் முகமது வாகில் என தெரியவந்தது.
அலிகார் முஸ்லிம் பல் கலைக்கழக பேராசிரியர்கள் அமைதி பேரணி நடத்தினர். சட்டசபையில் சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து கோஷங் கள் எழுப்பினார்கள். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலத்திலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பெங்களூரு உள்பட பல இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மங்களூருவில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவைத்தனர்.
போலீசார் தடியடி நடத்தியும் கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதன்பின்னர் கூட்டத்தினர் சிதறி ஓடினர். அப்போது 2 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தது தெரிந்தது. அவர்கள் ஜலீல் (வயது 49), நவ்சீன் (23) என தெரியவந்தது. போராட்டம் காரணமாக மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
பீகார் மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்துக்கு சில சிறிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பாட்னா ராஜேந்திரா நகர் ரெயில் நிலையத்தில் இடதுசாரி மாணவர் இயக்கத்தினர் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டியடித்தனர்.
சிறிது நேரத்தில் முன்னாள் எம்.பி. பப்பு யாதவின் ஜன் அதிகார் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் ராஜேந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் அருகில் உள்ள சாலையில் டயர்களை எரித்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. தர்பங்கா மாவட்டம் லஹாரியா சாராய் ரெயில் நிலையத்திலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஜெஹனாபாத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர். சில நகரங்களில் முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினார்கள். முஸ்லிம் அமைப்பு ஒன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு கல்லூரி முன்பு போராட்டம் நடத்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேசமயம் மேற்குவங்காள மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சட்டத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இடையே தெருக்களில் சிறிய தகராறுகள் நடந்ததாக புகார்கள் வந்தன. முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் பேரணி நடத்தினார். ராம்லீலா மைதானத்தில் இருந்து கம்யூனிஸ்டு கட்சியினரும் பேரணி நடத்தினர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியிலும் இயல்புநிலை திரும்பியது. இதனால் அங்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டது. திப்ருகாரில் கட்டுப்பாடுகள் 14 மணி நேரத்துக்கு விலக்கப்பட்டது. வன்முறை சம்பவம் பற்றி எந்த புகாரும் இல்லை. வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் திறந்திருந்தன. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிலும் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன.