விசாகப்பட்டினம்: 26 இடங்களில் கைவரிசை காட்டிய ஐ.டி. ஊழியர் கைது; தங்கம்-வெள்ளி பொருட்கள் மீட்பு

ஆந்திர மாநிலம் கஜுவாகா பகுதியில் நடந்த திருட்டில் கிடைத்த சிறிய தடயத்தின் அடிப்படையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
விசாகப்பட்டினம்: 26 இடங்களில் கைவரிசை காட்டிய ஐ.டி. ஊழியர் கைது; தங்கம்-வெள்ளி பொருட்கள் மீட்பு
Published on

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு புகார்கள் பதிவாகின. கடந்த சில மாதங்களாக நடந்த இந்த திருட்டுகளில் எந்த தடயமும் கிடைக்காமல் போலீசார் திருடனை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இந்த நிலையில் கஜுவாகா பகுதியில் நடந்த திருட்டில் கிடைத்த சிறிய தடயத்தின் அடிப்படையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவர் மென்பொருள் துறையில் வேலை செய்து வருவதும், பகலில் பல்வேறு இடங்களை நோட்டம் விட்டு குறிப்பிட்ட இடைவெளியில் திருட்டுகளை அரங்கேற்றி சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

திருட்டு தொழிலுக்காக முதலில் ஒரு நபரின் மோட்டார் சைக்கிளை திருடி அதையே பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் ஐ.டி. துறையில் வேலை செய்வதால் கைரேகைகள் மற்றும் தடயங்களை விட்டுச் செல்லாதவாறு நன்கு திட்டமிட்டு திருட்டுகளை அரங்கேற்றி வந்துள்ளார். திருடிய பணத்தில் பி.எம்.டபுள்யூ சொகுசு கார் ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. 26 இடங்களில் கைவரிசை காட்டிய அவரிடம் இருந்து 699 கிராம் தங்கம், 3.8 கிலோ வெள்ளி மற்றும் சொகுசு கார், வீட்டை உடைக்க பயன்படுத்தும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

26 வழக்குகளிலும் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம், 6 கிலோ வெள்ளி மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. அதன் மதிப்பு ரூ.25 லட்சத்துக்கு மேலாகும். பிடிபட்ட ஐ.டி. ஊழியரின் பெயர் அச்சி மகேஷ் ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சிறு வயதிலும் திருட்டில் ஈடுபட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டவர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com