

ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வீடியோவை காட்டி பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த வீடியோவில் தாடி வைத்த ஒரு நபர் மதிப்பு இழந்த பணம் ரூ.5 கோடியை ஒருவரிடம் கொடுத்து அதற்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.3 கோடி பெற்றுக்கொள்கிறார். இந்த வீடியோ ஆமதாபாத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளர் இதை படம்பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் பா.ஜனதா உறுப்பினராக இருக்கலாம். 2016-ம் ஆண்டு இறுதிக்கு பின்னர் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் சிலர் இணைந்து பல்லாயிர கோடிக்கணக்கில் செல்லாத பணத்தை மாற்றியுள்ளனர். இதற்கு 40 சதவீதம் வரை கமிஷன் பெற்றுள்ளனர். இந்த வீடியோவில் இருக்கும் நபரை யாராவது அடையாளம் காட்டினால் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ரூ.1 லட்சம் பரிசு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.