நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு: அமர்த்யா சென்னுக்கு மத்திய பல்கலைக்கழகம் நோட்டீஸ்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்னுக்கு மத்திய பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில், 89 வயதான அவருக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம், வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் அமர்த்யா சென்னுக்கு சட்டப்படி பாத்தியப்பட்ட 1.25 ஏக்கருக்கு பதிலாக, அவர் 1.38 ஏக்கர் நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதன்மூலம் 13 சென்ட் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். அந்த நிலத்தை விட்டு அவர் வெளியேற வேண்டும். இவ்விவகாரத்தில் 19-ந் தேதி பகல் 12 மணிக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அப்போது, அமர்த்யா சென்னோ அல்லது அவருடைய வக்கீல்களோ ஆஜராக வேண்டும். எழுத்துப்பூர்வமான பதிலை, 18-ந் தேதி மாலை 6 மணிக்குள் தெரிவிக்கலாம். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ், அமர்த்யா சென் வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். நோட்டீசுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், விஸ்வபாரதி பல்கலைக்கழக செய்தித்தொடர்பாளர் மஹுவா பானர்ஜி கூறும்போது, ''அமர்த்யா சென், இன்னும் நோட்டீசுக்கு பதில் அளிக்கவில்லை. இ்ன்னும் சில நாட்கள் காத்திருப்போம். 19-ந் தேதிக்குள் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். 19-ந் தேதி, இறுதி தீர்ப்பு மூலம் இப்பிரச்சினை முடித்து வைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com