

டெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமடைந்து வருகிறது. இதனால், உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் கொரோனாவின் தாக்கம் புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உரிய நடைமுறையை பின்பற்றி தகனம் செய்யப்படுகின்றனர். சில கொரோனா உயிரிழப்புகள் அரசு கணக்கில் வராமல் தகனம் செய்யும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகன மேடையில் எரியூட்டப்பட்ட பின்னர் எந்த உடலின் அஸ்தியை குடும்ப உறுப்பினர்கள் வாங்காமல் செல்லும் நிகழ்வுகள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது.
தகனம் செய்யும் பகுதியில் எந்நேரமும் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் குவிவதாலும், அங்கு மக்கள் கூட்டமாக வருவதாலும் கொரோனா மேலும் பரவும் அச்சம் எழுந்துள்ளது. இதனால், கொரோனாவால் உயிரிழந்து எரியூட்டப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினரின் அஸ்தியை வாங்கக்கூட சிலர் வருவதில்லை.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்து யாரும் உரிமைகோராமல் எரியூட்டப்பட்ட உடலின் அஸ்தியை ஆகாஷ் கஷ்யப் என்ற தன்னார்வலர் சேகரித்து வருகிறார்.
அவ்வாறு சேகரிக்கும் அஸ்தியை அவர் இந்து மத முறைகளை பின்பற்றி இறுதி மரியாதை செலுத்தி கங்கை நதியில் கரைக்கிறார். இந்த நடவடிக்கையை ஆகாஷ் உடன் இணைந்து மேலும் சில தன்னார்வலர்கள் குழுவாக மேற்கொள்கின்றனர். தன்னார்வலர் ஆகாஷ் மற்றும் அவரது குழுவினர் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.