

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-
மராட்டியத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை பொருட்கள் கடைகள் 4 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நகரங்கள், மாவட்டங்கள் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்தும் கொரோனா பாதிப்பு எதிர்பார்த்த அளவு குறையவில்லை.
கட்டுப்பாடுகளால் மாநிலத்தில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு குறைந்து உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவிலேயே உள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருப்பது கவலைக்குரிய விஷயம். இந்த நிலையில் கொரோனா நிலவரம் குறித்து அரசு ஆய்வு செய்யவும். மேலும் வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.